"செருக்கோடு நிமிர்ந்திருந்த எனது பள்ளி"
(NEW TAMIL MIDDLE SCHOOL)
"சேகர்"..."சேகர்".... "சேகர்"...
1957 ம் ஆண்டு மே மாதம் 23ம் நாள்.
கண்ணாடி "டீச்சர்" "அட்டெண்டன்ஸ்" எடுத்துக்கொண்டிருக்கிறார்.
மணை போன்ற ஒரு "பென்ச்சில்" அமர்ந்துகொண்டு "டீச்சர்" முகத்தையே
பார்த்துக்கொண்டிருக்கிறேன். "ஏன் இன்னும் என் பெயரைக் கூப்பிடவில்லை?"
மனம் என்னை அரித்தெடுத்துக் கொண்டிருக்கிறது.
"டீச்சர்" என்னை முறைத்துப்பர்க்கிறார்.
"உன் பெயர் தானே சேகர்? ஏன் "ப்ரெசென்ட்" சொல்லவில்லை?
"ஹ்ம்ம்...என் பெயர் சேகர் இல்லை. ராஜசேகர்..."
(அதெப்படி..? "டீச்சர்" என் பெயரைத் தவறாகச் சொல்லலாம்" என்ற அகந்தை(?)யோடு)
ஆண்டுகள் உருள வகுப்புப் படிகளைத் தாண்டிக்கொண்டிருக்கிறேன்.
எத்தனை நிகழ்வுகள். "சரஸ்வதி டீச்சர்" வேறு பள்ளிக்கு மாற்றலாகிச் சென்ற
நிகழ்வில் மாணவ, மாணவிகள் அனைவரது கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியதை
மறக்கமுடியுமா?
ஐந்தாம் வகுப்பில்தான் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது.
"திரு.கோவிந்தராஜ்" தலைமை ஆசிரியர் அவர்கள் தோளில் ஒரு பிரம்பை வைத்துக்கொண்டுதான்
வகுப்பறைக்குள் நுழைவார். மாணவர்களைப்பார்க்காமலேயே பின்னால் பிரம்பை நீட்டி
"வாட் ஈஸ் நௌன்?" என்பது போன்ற பல கேள்விகளை பலநேரங்களில் திடீரெனக் கேட்பார்.
அவர் குரலில் ஒரு கம்பீரம் இருக்கும். மாணவர்கள் அவரைப்பார்த்து நடுநடுங்குவார்கள்.
என்.டி.எம். தமிழ்ப் பள்ளியை மிகவும் திறம்படவும், கண்டிப்புடனும் நடத்திவந்தார் எங்கள்
தலைமை ஆசிரியர் திரு.கோவிந்தராஜ் அவர்கள்.கோலார் தங்கவயலில் எங்கள் பள்ளிதான்
முதலிடத்தில் இருந்தது.
பள்ளிக்காக முதன்முதலில் ஒரு வானொலிப்பெட்டியை வாங்கினார்கள். அதனை ஓர் அறையில்
வைத்து தினமும் பிற்பகல் இரண்டு மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கிலச் செய்தியினைக் கேட்டு
எட்டாம் வகுப்பு மாணவர்கள் அப்படியே எழுதி, மறுநாள் தலைமை ஆசிரியரிடம் காட்ட வேண்டும்.
நல்ல வேளை! நாங்கள் எட்டாம் வகுப்பு வருவதற்குள் அரசு நடுநிலைப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பை
நீக்கிவிட்டது.
சிந்தித்துப்பாருங்கள். ஆங்கிலம் படிக்கத்துவங்கியதே ஐந்தாம் வகுப்பில். எட்டாம் வகுப்பில்
வானொலிச்செய்தியைக் கேட்டு எழுதவேண்டும் என்றால் எத்தனை திறமையுடன் ஆசிரியர்கள்
பாடம் சொல்லித்தந்தந்திருக்க வேண்டும்.
திரு.மாரிமுத்துஅவர்கள், திரு,தங்கராஜ்அவர்கள், திரு,கோதண்டம்அவர்கள், கொத்தூர் திரு.சுப்பிரமணியம் அவர்கள்,
திரு,ஏ.சின்னதுரைஅவர்கள், திரு.கே.சின்னதுரை அவர்கள் , திரு.கணிகண்ணன் அவர்கள், கன்னட ஆசிரியை
திருமதி.ராஜம்மாள் அவர்கள், திருமதி கமலா ஆசிரியை அவர்கள், "கண்ணாடி டீச்சர்" என்றே அழைத்துப் பழகியதால்
அவரது பெயர் நினைவில் இல்லை, தமிழாசிரியர் திரு. கோவிந்தராஜ் அவர்கள், திரு,நேமிநாதன் அவர்கள்,
திருமதி.ப்ரேமா நேமிநாதன் அவர்கள் இன்னும் எத்தனை பேர். அனைவருமே மாணவர் நலனில் அக்கறை
கொண்டவர்களாகவே இருந்தனர். வெறும் சம்பளத்துக்கு மட்டும் பணியாற்றுபவர்களாக இருக்கவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் தலைமை ஆசிரியர் திரு. கோவிந்தராஜ் அவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றலாகிச்
சென்று விட்டார். இந்தி கற்பிப்பதற்காக வடநாட்டு ஆசிரியை ஒருவர் எங்கள் பள்ளிக்கு வந்தார்.
சரியான தலைமையாசிரியர் இல்லாத காரணத்தாலும், இந்தி ஆசிரியையின் பகட்டான நடத்தையினாலும்
ஆசிரியர்கள் சிந்தையும் செயலும் திசைமாற சிறிது சிறிதாக எங்கள் பள்ளி தனது தனித்தன்மையை இழந்து வந்தது.
போதாக்குறைக்கு தங்கவயல் மக்களின் ஆங்கிலக் கல்வி மோகத்தினாலும், (இதனை மோகம் என்று சொல்வதும்
தவறான கருத்தாகவே அமையும். கர்நாடகத்தில் தமிழ் படித்தால் தங்களுக்குச் சரியான எதிர்காலம் இல்லை
என்று மக்கள் மனதில் ஏற்படுத்தப்பட்ட அச்சமும் காரணம்) கர்நாடக அரசு தமிழர்கள் மீதும் தமிழ்க்கல்வி மீதும் சரியான
அக்கறை காட்டாததினாலும் தங்கவயலில் தமிழ்ப்பள்ளிகள் ஒவ்வொன்றாகக் குறைந்து, பின்னர் தமிழ்ப்பள்ளிகளே
தங்கவயலில் இல்லை என்னும் சூழல் உருவாகிவிட்டது. தமிழ் நாளிதழ் படிப்போர் மிகவும் அருகி வருகின்றனர்.
இன்னும் சில ஆண்டுகளில் தங்கவயலில் தமிழர்களுக்கே தாங்கள் தமிழர்கள்தானா என்ற அய்யம் ஏற்பட்டுவிடக்கூடும்.
ஹ்ம்ம்....இதனை எழுதத் தூண்டியது எது? அண்மையில் நான் படித்த பள்ளியின் அவல நிலையைப் பார்த்தவுடன்
எனது நெஞ்சில் மூண்ட ஆற்றாமைத்தீ! பள்ளியை நெருங்கும்போதே கடந்தகால நினைவுகள் பசுமையாய்
நெஞ்சில் திரைப்படமாய் ஓடியதே! அய்யோ! இதோ! நான் முதலாம் வகுப்பு படித்த அறை இப்படி மண்மேடாகக்
காட்சி அளிக்கிறதே. இந்தக் குட்டிச்சுவர்கள் வானொலி அறையாயிற்றே! எட்டாம் வகுப்பு மாணவர்கள்
வானொலிச் செய்தியைக் கேட்டு தங்களது நோட்டுப்புத்தகத்தில் எழுதும் காட்சிகள் விழித்திரையில் தோன்றுகிறதே!!!
இதோ இந்த அறையில்தான் கமலா டீச்சர் கணக்குப்பாடம் நடத்தினார். அதோ அந்தக் கல் கட்டிட அறையில்தான்
திரு.கே.சின்னதுரை அவர்கள் "திண்ணைத் தூங்கி தடிராமன்" கதை சொன்னார். இதோ இதுதான் தண்ணீர்க்குழாய் அறை.
இங்குதான் கன்னடத்திற்கும், இந்திக்குமான "கம்பைண்ட் க்ளாஸ்" நடத்தப்படும்.
அய்யோ!!! பேரழிவு இந்தப் பள்ளிக்கு மட்டுமா? தமிழினத்தை வேரறுக்க, தமிழ்ப்பகைவர்களின் சூழ்ச்சிகள்
மெல்ல மெல்ல ஈடேறிவருகின்றன என்பதைத்தானே பறையறிவிக்கின்றன. மெல்லத் தமிழினிச் சாகும் என்ற
பாவேந்தர் இதையும் பார்த்திருப்பாரோ?